ஆர்ப்பரிக்கும் கூட்டம். அட்டகாசமான அரங்கு. இரவை பகலாக்கும் வண்ணமிகு வெளிச்சம். அனல் பறக்கும் ஆட்டம். இவைதான் நவீன கிரிக்கட்டின் பரிணாமம். இந்த கிரிக்கட் போட்டியாட்டங்களுக்ல்லாம் சிகரம்தான் உலகக் கோப்பை. நான்கு வருடங்களுக்கொருமுறை நடைபெறும் இந்த சுற்றுப் போட்டிகள், மீண்டும் 9வது முறையாக கரிபியன் தீவுகளில் அரங்கேறி ஆரவாரமின்றி அரையிறுதி தாண்டி இறுதிப்போட்டிக்காக காத்திருக்கிறது. இதற்கு தன்னை அர்ப்பணிக்க பார்படோஸ் அரங்கம் தயாராகிவிட்டது.
முதன்முறையாக இரண்டு அணிகள் இரண்டாவது தடவையாக இறுதிப்போட்டியில் சந்திக்கின்றன. அவை ஆஸ்திரேலியாவும் இலங்கையும். 1996 ம் ஆண்டு மார்ச் 17 ந் திகதிக்கு
பின்னர் மீண்டும் 2007 ம் ஆண்டு ஏப்ரல் 28 ந் திகதி. ஆஸ்திரேலியா ஏற்கனவே 1987ம் ஆண்டு, 1999ம் ஆண்டு, 2003ம் ஆண்டு கோப்பையை தன்வசமாக்கி அதே ஆக்ரோஷத்துடன் இம்முறையும் அள்ளிக் கொண்டு போக துடித்துக் கொண்டிருக்கிறது. உலக்கிண்ணப்போட்டிகளில் இவர்கள் 1999ம் ஆண்டிலிருந்து 2003ம் ஆண்டு, 2007ம் ஆண்டு அரையிறுதிப் போட்டி வரை தோல்விகளைச் சந்திக்காது 28 போட்டி வெற்றிக்கனிளை மட்டும் உண்டு சற்றே இறுமாப்புடனதான் இருக்கிறார்கள். இந்த வெற்றிக் காட்டாற்று வெள்ளத்தை தடுத்து நிறுத்த அரும்பாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள் இலங்கை அணியினர். நிறுத்துவார்களா ? அல்லது அந்தக் காட்டாற்று வெள்ளத்துடன் மற்றவர்களைப் போலவும் அள்ளுண்டு போவார்களா ? பொறுத்திருக்க வேண்டு்ம் நாளை வரை.
பொதுவாக ஆஸ்திரேலியர்களுக்கு ஆசிய அணிகள் அந்நிய ஆடுகளங்களில் (ஆஸ்திரேலியா தவிர - அங்கு கதை வேறு) சிம்ம சொப்பனம்தான். பொதுவாக அவர்கள் இலங்கை அணிக்கு பயந்தவர்களே. 2003ம் ஆண்டு ஆஸ்திரேலியா அணி விக்கட் காப்பாளர் அடம் கில்கிறிஸ்ட் (Adam Gilchrist) சொன்னார். "எமக்கு எவராலும் ஆபத்து இல்லை. இலங்கை மட்டும் எமக்கு அச்சுறுத்தல் கொடுக்கும்". அதுதான் அம்முறை அரையிறுதிப்போட்டியில் நடந்தது. எல்லாப் போட்டிகளிலும் பொழந்து கட்டிய ஆஸ்திரேலியா இலங்கையுடன் பெட்டிப்பாம்பாய் அடங்கியது. ஆனால் இலங்கையர்கள் தமது அசட்டைத் தனத்தினால் தாரைவார்த்துக் கொடுத்தனர் வெற்றியை. (2003 ம் ஆண்டு அரையிறுதிப்போட்டி). ஆனால் இம்முறை கடுமையாக போராடுவார்கள். அது அவர்களுக்கு ஒரு சுவையான வெற்றியையும் ஆஸ்திரேலியர்களுக்கு அதிர்ச்சி வைத்தியமுமாக இருக்கலாம்.
ஆஸ்திரேலியர்கள் ஜாம்பவான்கள்தான். அதை அவர்கள் பலமுறை நிரூபித்திருக்கிறார்கள். இம்முறையும் அவர்கள் அதை சாதிக்க முயலுவார்கள். இலங்கை அணி இறுதிப்போட்டியை தாம் சந்திப்போம் என முன்பே கணித்து சுப்பர்8 போட்டியில் ஆஸ்திரேலியர்களிடம் இருந்து தமது பந்துவீச்சு ஆயுதங்களை மறைத்து கண்ணாமூச்சி காட்டினார்கள். இதை ஆஸதிரேலியர்கள் பகிரங்கமாக எதிர்த்தார்கள். இது பந்தயக்காரர்களுடன் தொடர்புபட்டது (Match Fixing )என முன்னால் தலைவரும் பரிதாப இந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் கிரெக் சப்பலின் (Greg Chappel) சகோதரருமாகிய இயன் சாப்பல் (Ian Chappel) துள்ளினார். இதுவும் போட்டிகளின் ஒரு தந்திரோபாயம்தானே. இதற்கு ஏன் அவர்கள் பொரும வேண்டும். அவர்களுக்கு அந்த போடடி பலத்த ஏமாற்றமாக இருந்தது. அவர்கள் நிறையவே எதிர்பார்த்தார்கள். ஆனால் இலங்கை அணி எதிபார்ப்புகளுக்கு அப்பாற்பட்டது என காட்டினார்கள். இவர்களுக்கு இலங்கை அணி பயிற்றுவிப்பாளர் ரொம் மூடி (Tom Moody),
-அவரும் ஆஸ்திரேலியா நாட்டவர்- செம்மையாக கொடுத்திருக்கிறார். " நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள். நீங்கள் மட்டும் உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு நீங்களாகவே ஏற்பாடு செய்த சப்பல்-ஹட்லி கோப்பை (Chappel - Hadlee Trophy) போட்டிகளில் ரிக்கி பொண்டிங் மற்றும் அடம் கில்கிறிஸ்ட் ஆகியோருக்கு ஓய்வு வழங்கவில்லையா? நாமும் அவ்வாறே அரையிறுதியை கருத்தில் கொண்டு அப்படி செய்தோம்" என்று முழங்கியிருக்கிறார்.
பார்ப்போம் அவர் வியூகங்களை. அது வெற்றி செய்தியை தருமா? அல்லது கவிழ்க்குமா என்று. எதற்கும் நல்லதையே சிந்திப்போம். எமது ஆசிய நாடு ஒன்று வெற்றிபெறுவது மகிழ்ச்சிதானே. இறுதிப்போட்டிகளில், 1992ம் ஆண்டும் ஒரு ஆசிய நாடாகிய பாகிஸ்தான் கோப்பையை வென்றது. 1996ம் ஆண்டும் ஒரு ஆசிய நாடு இலங்கை ஆஸ்திரேலியாவை
வென்றது. 1999ம் ஆண்டும் ஆசிய நாடு பாகிஸ்தான் ஆஸதிரேலியாவிடம் மண் கவ்வியது. மீண்டும் 2003ம் ஆண்டு ஆசிய நாடு இந்தியா அதே ஆஸதிரேலியாவிடம் சுருண்டது. இம்முறை பார்ப்போம். 2007ம் ஆண்டு அதே ஆஸ்திரேலியா மீண்டும் ஒரு ஆசிய அணி. இலங்கை கவிழ்க்குமா? அல்லது கைப்பற்றுமா?. (இப்போது இதை இருவரும் வைத்து போஸ் கொடுக்கிறார்கள் ஆனால் இதை யார் சொந்தமாக்க போகிறார்கள். பொறுத்திருப்போம்.)